சிவாலயம்


தமிழ்ச்சுரங்கம்


ஓங்கு புகழ்த் தமிழின் நீடிய வரலாற்றின் சிறப்பெல்லாம் அதன் நிலம், மக்கள், மரஞ் செடி கொடி, புல் முதலிய தாவரங்கள், விலங்கு, பறவை முதலிய நால்வகைத் தோற்றத்து உயிரினங்கள் தொடங்கி ஆறு திறத்து அறிவின் மேம்பட்ட மக்கள் வாழ்க்கை, அம்மக்கள் பைய நாவை அசைத்துப் பேசிய மொழியின் எழுத்துக்கள், அம்மக்கள் தம் பிற்றோன்றல்களாகிய நமக்கு விடுத்துச் சென்ற செல்வங்களாகிய கலைகள் அவை குடிகொண்டுள்ள கோயில் முதலாகிய கட்டிடங்கள் அவைகளை நிலையாகக் கொண்டுள்ள இசை, நாடகம் முதலியவை, அம்மக்களின் வாழ்க்கை, உழவு, நெசவு, கைத்தொழில் முதலிய வாழ்வு ஆதாரங்கள். அவர்கள் தமக்குள் ஒரு தலைமையை உருவாக்கிக் கொண்டு அதன் நெறி காட்டலை மதித்துக் கூடிய வாழ்ந்த வாழ்வு அதன் உறவு, நட்பு, பகை, இவைகளோடு அற்புதமான காதல் வாழ்வு எல்லாவற்றிற்கு மேலாகத் தம் வாழ்முதலாக மதித்த இறையுணர்வு, அதன் வெளிப்பாடாகிய பல சமயங்கள் அதன் பதிவுகள் நூல்களாக நமக்குக் காட்டுகின்றன.


காலம் நெடியது; அதன் வீச்சில் இனிய மணம் பயந்த தென்றலே போல. புயல் நலிந்த கதைகளும் உண்டு. இப்பதிவுகளாகிய அரிய நூல்கள் அரசியல் பகையும் மாந்தர் தம் அறியாமையும் சோர்வும் சேர்ந்து குலைத்துச் சிதைத்ததால் அழிந்து சோர்ந்த கதைகளும் உண்டு.


இந்நூல்களைப் பழங்காலத்தார் பனையேட்டில் மட்டுமேஎழுதிப் படித்தனர். தமிழகத்தில் பாதுகாத்தனர். அச்சுக்கலை தோன்றி நானூறு ஆண்டுகள் ஆயினும் நான்கு தலைமுறைக்கு முன் வரை பனை எட்டிலேயே இயற்றினர். எழுதினர், படித்தனர், கற்பித்தனர். அப்பதிவுகளை அழிவினின்று அரும் பாடு பட்டு மீட்டு அச்சேற்றிப் பாதுகாத்து, பெரியோர்கள் நமக்குத் தன் முயற்சியால் ஈட்டிய பொருளை நமக்கென விட்டுச் சென்ற தந்தையின் மேலான தகுதியுடையவர்கள்; தாயினுஞ் சாலத் தயை உடையவர்கள் ஆறுமுக நாவலர், சி.வை. தாமோதரம் பிள்ளை முதலாகிய மேன்மக்கள்.


இவர்கள் யாவரினும் நம் சிந்தையைக் கவர்பவர் டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்களே காரணம், இன்றும் தமிழின் பழமையை நிலை நிறுத்தி நமக்கொரு மொழியும், பண்பாடும் நெடிய வரலாறும் உண்டு என நிரூபிக்கும் சிலம்பு, மணிமேகலை, சிந்தாமணி, பெருங்கதை என்னும் பெருங்காப்பியங்களையும், பத்துப்பாட்டும் எட்டுத்தொகையில் பெரும்பாலனவும் அப் பெருந்தகையார் நமக்கு மீட்டளித்த செல்வங்கள் ஆம். இருந்தமிழே உன்னாலிருந்தேன் இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் என்ற வாக்கிற்கு இலக்கணமாக விளங்கிய பெரியார் ஏராளமான நூல்களைச் சுவடி வடிவில் சேமித்து வைத்து நமக்கு விட்டுச் சென்றுள்ளவர்.


இப்பழநூல்களை அடிப்படையாகக் கொண்டு உரைகளும், வரலாற்றாய்வுகளும், இலக்கிய விமர்சனங்களும் விளைந்த வண்ணமுள்ளன.


அச்சுக்கலை பத்தொன்பதாம் நூற்றாண்டு இருபதாம் நூற்றாண்டுகளில் மிக முன்னேற்றத்தைப் படிப்படியாகக் கண்டு வளர்ந்த காலத்தில் மிக உயர்ந்த உரை நூல்கள், தத்துவ விளக்கங்கள் வெளிவந்தன.


அவைகள் இன்று கிடைப்பரிதாயின. பின் வந்த இன்றைய நூல்களுக்கு ஆதாரமாய் வழித்துணையாய் விளங்கும் அந்த நூல்களும் முன் பனையேடுகள் போலவே பேணுவாரின்றிச் சிதைவை எதிர் நோக்கியிருந்த சூழ்நிலையில் நமது சிவாலயம் அவைகளை ஒவ்வொன்றாக மீள் பதிப்புச் செய்து வாழ்விக்கும் பணியைத் தன்தலைமேற் கொண்டுள்ளது.


இந்நூல்களை மிக உயர்ந்த காகிதத்தில், தெளிவான அச்சில், நல்ல உயர்ந்த கட்டடத்தில், நிரம்ப வண்ணப் படங்களோடு சிறப்பம்சமாக; சிறந்த ஆய்வு பதிப்புரையோடு சிவாலயம் வெளியிட்டு மகிழ்கிறது. உயர்ந்ததை உயர்ந்த இடத்தில் வைக்க வேண்டும் அன்றோ. இத்தனைக்கும் இலாப நோக்கில் அல்லாமல் அடக்க விலையில் வழங்குகிறது.